மேற்கு வங்கத்தின் நாரதா இணையதளம், கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு புலனாய்வு நடவடிக்கையை நடத்தியது. அந்த நடவடிக்கையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு வெளியானது. அந்த வீடியோவில், திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பிறகு இந்த வீடியோ தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில், தற்போது அமைச்சர்களாக இருக்கும் பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, எம்.எல்.ஏ மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது சிபிஐ கைது நடவடிக்கை எடுத்தது. பின்னர் இவர்களை அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சட்டமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெறாமல், அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-வையும் கைது செய்தது சபாநாயகர் பதவியின் மாண்பைக் குலைப்பதாகக் குற்றஞ்சாட்டி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது மேற்குவங்க சட்டமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தபஸ் ராய், இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.