திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். இதன் காரணமாக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் முதல் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் வருகையின் போது, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடி திருச்சி வருகையின் போது திருச்சியில் 33,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.
விமான நிலையத் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் 1-ம் தேதி இரவு சென்னையில் இருந்து இன்டிகோ விமானத்தில் திருச்சி செல்கிறார். தமிழக முதல்வர் 2-ம் தேதி காலை 8 மணியளவில் தனி விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறார். முதல்வருடன் டி.ஆர் பாலு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான முதல்வரின் செயலாளர்களான முருகானந்தம், சண்முகம் ஆகியோர் செல்கின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல், முதல்வரின் உதவியாளர் தினேஷ் மற்றும் நாகராஜ், செல்வராஜ், சதிஷ் ஆகியோரும் பயணப்படுகின்றனர்.
பன்னாட்டு விமான நிலையம் திறப்பு விழா நிறைவடைந்தவுடன் பிற்பகல் மூன்று மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் திருச்சியில் இருந்து புறப்பட்டு 3.45-க்கு சென்னை வருகின்றனர். இவர்களுடன் அமைச்சர் நேரு மற்றும் திருநாவுக்கரசு ஐ.பி எஸ். ஆகியோரும் சென்னை வருகின்றனர். ஆளுநர் ரவி பிற்பகல் இரண்டு மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மூன்று மணிக்கு சென்னை வருகிறார்.