இந்தியா முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி கட்ட மக்களவை தேர்தல் மே -19 யுடன் நிறைவு பெறுகிறது. பின்பு வாக்கு எண்ணிக்கை மே -23 ஆம் தேதி நடைப்பெறவுள்ளது. இதனால் இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 17-வது மக்களவையில் புதிய திருப்பமாக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் ஆட்சி அமைக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதை பல்வேறு மாநில முதல்வர்களும் உறுதிப்படுத்தும் விதமாக பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே மே 21 ஆம் தேதி மாநில கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார். மேலும் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வரும் நிலையில் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , உத்தர பிரதேச மாநில முதல்வர்கள் அகிலேஷ் , மாயாவதி சந்திரபாபு நாயுடு நடத்தும் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மம்தாவும் , மாயாவதியும் பிரதமராக ஆக விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தர தயாராக உள்ளதாகவும் , அதற்கான இறுதி வடிவத்தை உறுதிச் செய்து , வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று உடனடியாக குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க நாயுடு திட்டமிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் பதவியை தங்களுக்கு அளிப்பதை உறுதி அளித்தால் மாநில கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க மம்தாவும் , மாயாவதியும் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். அதே போல் காங்கிரஸ் கட்சி தனது 65 ஆண்டுகால அரசியல் வரலாற்றை மாற்றியுள்ளது. அது என்னவென்றால் மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்துக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து மக்களவையில் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுவுடன் தெரிவித்ததாகவும் , மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நாயுடுவிடம் காங்கிரஸ் கட்சி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே மாநில கட்சிகள் கூட்டம் நடைப்பெறவுள்ளது .
மற்றொரு புறம் மூன்றாவது அணி அமைத்து பிரதமரை தேர்வு செய்யும் முனைப்பில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க முதலவர் மம்தா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய அரசியலை முன்னுறுத்திப் பிரச்சாரம் மேற்கொண்டதும் , அதே போல் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணி காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மக்களவை தேர்தலை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பிரதமர் போட்டியில் மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி என்பது உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பிறகு மம்தா மற்றும் மாயாவதி இவர்களில் ஒருவர் பிரதமராக அதிக சாத்தியக் கூறுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்த கட்சிகள் தங்கள் நிலைப்பட்டை மாற்றி இவர்களுக்கு ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது.