குடியரசுத்தலைவர் துணைத் தலைவர் தேர்தல் -
இன்று வாக்குப்பதிவு!
இன்று வாக்குப்பதிவு!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு மாலைக்குள் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 790 பேர் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாவர். வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் பெயர் இருந்தாலும் சின்னம் எதுவும் ஒதுக்கப்படாது. தனி பேனா மூலம் இந்த வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக வேட்பாளருக்கே அதிக ஆதரவு காணப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மக்களவையில் 337 பேரும், மாநிலங்களவையில் 80 பேரும் உள்ளனர். அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி ஆகிய கட்சிகளின் 67 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 18 கட்சிகள் கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் கோபாலகிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளது. ஆயினும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என எந்த கட்சியும் தங்கள் உறுப்பினர்களுக்கு உத்தரவிட முடியாது.
இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு மாலையே முடிவு அறிவிக்கப்படும்.