உக்ரைன் ரஷ்யப் போர் வெடித்ததால்தான் நீட் தேர்வால் வதைபட்ட கேரளாவின் 3800 மாணவர்கள், தமிழகத்தின் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மருத்துவக் கல்விக்காக உக்ரைன் சென்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே அதிருமளவுக்கு இந்தியாவிற்குத் தெரியவந்தது.
ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து தமிழகத்திற்குத் தேவையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பாக வருங்கால தலைமுறையான மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் தொழில் நுட்ப, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல் பல்வேறுபட்ட பணிகளில் தீவிரமாகயிருப்பது புருவங்களை உயரவைக்கிறது.
தமிழகத்தில் இப்படி என்றால் அண்டை மாநிலமான கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன். தன் மாநில மாணவர்களுக்காக ஐரோப்பியக் கல்வி முறையைக் கொண்டு வருவதற்காகக் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறார்.
மருத்துவ கனவோடிருக்கும் கேரள மாணவனுக்கு நீட் எனும் முட்டுக்கட்டை. அதே கனவை வெளிநாட்டுப் படிப்பின் மூலம் நனவாக்கிக் கொள்ளலாம் என்றால் வெகுசிலருக்குப் பொருளாதாரம் கைகொடுத்தாலும், பலருக்கோ பொருளாதாரச் சிக்கல். இது போன்ற முரண்பாடுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் கல்விக்காக வெளிநாடு செல்லுகிற மாணவர்களின் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் கொட்டித்தீர்ப்பதால் கடன் சுமையால் மீள முடியாமல் தவிக்கிற கொடுமை.
இதனையெல்லாம் அலசி ஆராய்ந்த கேரள முதல்வர், பினராயி விஜயன், மாணவர்கள் தேடி ஓடும் வெளிநாட்டுக் கல்வியை இங்கே இறக்குமதி செய்தால் அங்கே செல்வது தவிர்க்கப்படும். மாணவனின் கல்வித் தரம் வெளிநாட்டிற்கு இணையாக மேம்படும். குறிப்பாக மாணவனின் பெற்றோர் பொருளாதாரத்திற்காகச் சிரமப்பட வேண்டியதில்லை. செலவழிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது என்பதற்காகவே முதன்முதலாக அமெரிக்காவின் முதல்தர பல்கலைக்கழகங்களின் கல்வி முறைகளை இறக்குமதி செய்து கேரள பல்கலைக்கழகத்தில் இணைத்திருக்கிறார்.
இதற்காக மார்ச் 29 அன்று அமெரிக்க அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் நிபுணர்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.. இதற்காக கேரள அரசின் கல்வித்துறையில் தனியானதொரு துறையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
முதல்வர் பினராயி விஜயன். கேரளாவின் தலைமைச் செயலாளர் டாக்டர் வி.பி.ராய், கேரள அரசின் இதற்கான டெல்லி சிறப்பு அதிகாரியான வேணு ராஜாமணி ஆகியோரை கொண்ட குழு அமெரிக்காவின் ராஜீய உறவு அதிகாரியான கான்சல் ஜெனரல் (CONSUL GENERAL) ஜூடித்ரவினுடன் கேரள அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. கேரள மாணவர்களின் கல்வித்திறன் மேலைநாட்டுக் கல்விக்கு ஒப்பானதாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களின் சிலபஸ்களான (SYLLABUS) கல்விமுறையைக் கொண்டு கேரள பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கைக்கு ஏற்ப வடிவமைத்து மேலை நாடுகளின் மேம்பட்ட கல்வியைக் கேரள மாணவர்களுக்கு வழங்குவது. இதற்காக ஒப்பந்தத்தின்படி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், கேரள பல்கலைக்கழகங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றுவர். இதனால் கேரள மாணவர்களின் கல்வித்திறன் மேல் நாட்டுக் கல்விமுறைக்கு ஒப்பானதாக மாறும் என்கிற கேரள அதிகாரிகள், இதற்கு முதல் அச்சாரம் தான் உலகத்தரம் வாய்ந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு போடப்பட்ட ஒப்பந்தம் என்கிறார்கள்.
எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமெனில், வெளிநாட்டிலுள்ள ஒரு பல்கலையின் கம்ப்யூட்டர் டெக்னாலஜி கோர்ஸ்சின் தரம் கேரளாவில் இருக்காது. அந்தப் பல்கலையின் கம்ப்யூட்டர் டெக்னிக் கோர்ஸ் முறையை அந்த யூனிவர்சிட்டியினரின் உதவியுடன் கேரள பல்கலைக் கழகங்களில் இணைத்து மேலை நாட்டுக் கல்வி முறையை இங்கேயுள்ள மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கான ஒப்பந்தம் முதன்முறையாகக் கேரளாவில் போடப்பட்டிருக்கிறது.
மருத்துவம், விஞ்ஞானம், நுண்ணிய தொழில் நுட்பம், கலை மற்றும் இலக்கியம் போன்ற பிற கல்வி முறைகளுக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் பொருந்துமாம். இந்த முறையில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சான்றிதழ்களைக் கேரள, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்தே வழங்கும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இந்த ஒப்பந்தம் மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாது வேலைவாய்ப்பிலும், பிறநாடுகளுடன் அரசே ஒப்பந்தம் போடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். இதற்காகக் கேரளாவின் டெலிகேட்ஸ் வெளிநாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் நுட்பங்களை ஆய்வு செய்து அதற்கான பணியாளர்களைக் கேரளாவிலிருந்து அனுப்பி வைப்பார்களாம். அதே போன்று வெளிநாட்டின் டெலிகேட்ஸ் கேரளாவிலுள்ள தொழில்களை ஆய்வு செய்பவர்கள் அதன்மூலம் தங்களின் நிறுவனத்திற்கான பணியாளர்களை இங்கேயே தேர்வு செய்வார்களாம்.
இது போன்று கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும், கேரள அரசால் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா, ஜெர்மன், பிரிட்டன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப திறன் அமைப்புகளிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதில் தீவிரமாகியிருக்கிறார்களாம்.
இந்த வழிகளில் கேரள மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் மாநிலத்தில் சர்வதேச தரத்திலான 250 ஹாஸ்டல்கள் நிறுவப்பட உள்ளன. இந்தியாவில் முதன்முதலாகக் கேரளாவில் டிஜிட்டல் யூனிவர்சிட்டி அமைக்கப்படும். அதில் அமெரிக்காவின் உயர்மட்ட கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவார்கள். இதற்காக கேரளாவில் 500 நவகேரளம் பணிகள் டாக்டோரல் ஃபெல்லோஷிப் பலதுறையிலும் உருவாக்கப்படும். அதே போன்று அமெரிக்க நுண்ணிய தொழில் நுட்ப வல்லுநர்கள், கேரள மருத்துவர்களுடன் இணைந்து அமெரிக்க முறையிலான உயிர்காக்கும் ஊசி மருந்துகள் தயாரிக்கப்படும் என்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.