இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.