சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முழு பேருந்தும் சிதைந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. நாக்பூரிலிருந்து பூனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து சம்ருதி மகாமார்க் அதிவிரைவு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அதிகாலை 2 மணிக்கு மேல் திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 அதிகரித்துள்ள நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பிலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து டயர் வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறி டீசல் டேங்க் மீது பட்டு பற்றி எரிந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.