அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழங்கில் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
ராமர் கோவில் தொடர்பான இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி, "நாடாளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 க்குப் பிறகு கூட இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். ஆனால், தற்போதைய இந்த அறிவிப்பை பார்க்கும்போது, டெல்லி தேர்தல் குறித்து பாஜக கவலைப்படுவதாக தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.