
கரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்துவருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது முழு ஊரடங்கு செயல்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று (23.05.2021) முழு ஊரடங்கை ஆய்வு செய்ய சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அவர், அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞரின் செல்ஃபோனைப் பிடுங்கி சாலையில் உடைத்த அவர், அந்த இளைஞரையும் கன்னத்தில் அடித்தார். இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக, மாநில அரசு அந்த ஆட்சியரை இடமாற்றம் செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு ஆட்சியர் புது செல்ஃபோன் வாங்கித் தர வேண்டும் என்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.