கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வளர்ச்சி பணிகளுக்காக எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபூல் சுப்பிரியோ மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அவரது அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 1,09,75,844 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிலின்படி, 2014-15ஆம் ஆண்டு 23.3 லட்ச மரங்களும், 2015-16ஆம் ஆண்டு 17.01 லட்ச மரங்களும், 2016-17 ஆம் ஆண்டு 17 லட்சம் மரங்களும் , 2017-18ஆம் ஆண்டு 25.5 லட்ச மரங்களும் வெட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக, 2018-19ஆம் ஆண்டுகளில் 26.9 லட்ச மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களுக்கு மரம் நட 237.07 கோடி ரூபாயும், தேசிய மரம் நடும் திட்டத்தின் கீழ் 328.90 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரம் நடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் தற்போது செழித்து வளர்ந்து இருந்த ஒரு கோடி மரங்களை வெட்டியது அதிர்ச்சியளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.