Skip to main content

கரோனா கட்டுப்பாடுகள்: பதிலடியால் பணிந்த பிரிட்டன் - ஆனாலும் ஒரு சிக்கல்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

india uk

 

கரோனா தொற்று பரவல் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துவருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், வேறு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்கு வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இங்கிலாந்து அரசும் அவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

 

இந்தநிலையில் அண்மையில் பிரிட்டன் அரசு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்வர்களும் தங்கள் நாட்டிற்கு வரும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்தது. இது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து  பிரிட்டனுக்குப் பதிலடி தரும் வகையில், அந்த நாட்டிலிருந்து வரும் இங்கிலாந்து குடிமக்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்தியா அறிவித்தது. இந்தநிலையில் தற்போது பிரிட்டன், தான் முன்பு அறிவித்த விதிமுறைகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. அதாவது கோவிஷீல்ட் அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இந்தியர்கள் அக்டோபர் 11ஆம் தேதியிலிருந்து இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

 

இருநாட்டு (இந்தியா, பிரிட்டன்) அமைச்சகங்களுக்கு இடையேயான நெருக்கமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து தூதரகத்தின் செய்தி தொடர்பளார் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் பிரிட்டனின் போக்குவரத்துச் செயலாளர், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இந்தியா, துருக்கி, கானா உள்ளிட்ட 37 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள், முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரிட்டன் பயணிகள் போலவே நடத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

 

இருப்பினும் பிரிட்டன் தூதரகத்தின் அறிவிப்பின்படி, கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலை நீடிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்