20 லட்சம் கோடியில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த சிறப்பு திட்டங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் கூறுகையில்,
சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதுறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகள் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அறிவித்த விரிவான பொதுநோக்கு திட்டத்தின் பெயர் ''தன்னிறைவு இந்தியா''. இதில் 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படும்.
உள்ளூர் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாக தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு எட்டியிருக்கிறது. இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படும்.
இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே தற்சார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ''தற்சார்பு இந்தியா'' என்றால் உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வதல்ல, தன்னம்பிக்கையை அதிகரிப்பது ஆகும். பிரதான் மந்திரி கிசான் திட்டம் மூலம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்தப்பட்டது. பொதுமுடக்க காலத்தில் இது மிகவும் உதவியாக இருந்தது. நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது இதனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று இருக்கிறது. சிறு, குறு தொழில் துறைக்கு இன்று 6 சலுகைகளுடன் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இன்று மொத்தம் 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சிறு, குறு தொழில் துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்.
பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். இவைகளை அடிப்படையாகக்கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நெருக்கடிகளில்தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறோம்.
நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குவதால் 2 லட்சம் நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விரிவாக்க புதிய கடன் திட்டம் உள்ளது. குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடியாக உயர்தப்படும். நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலீட்டு வரம்பு 10 கோடியிலிருந்து 20 கோடியாக அதிகரிப்பு.
சிறு, குறு தொழில் துறைக்கு பிணை இன்றி 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும். 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டத்தில் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். 100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு 25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டிற்கு கடன் தவணை வசூலிக்கப்பாடது. இந்த புதிய கடன் வசதியை பெற, சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை என்றார்.