காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் வேட்பாளருமான சசி தரூர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவில் பூஜையில் கலந்து கொண்ட போது, அவரது எடைக்கு எடை காணிக்கை வழங்குவதற்காக துலாபாரம் சடங்கு மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக சசிதரூர் அமர்ந்திருந்த தராசின் இரும்பு கம்பி உடைந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தலையில் தையல்கள் போடப்பட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் சசிதரூர் வெளியிட்ட பதிவில், ''தேர்தல் பிரச்சாரத்துக்காக திருவனந்தபுரம் வந்த நிர்மலா சீதாராமன் என்னைச் சந்தித்து நலம் விசாரித்தார். இதுபோன்ற பண்பு இந்திய அரசியலில் அரிதான ஒன்று. அதற்கு நிர்மலா சீதாராமன் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.