![New IT rules ..! High court orders govt to respond to TM Krishna case](http://image.nakkheeran.in/cdn/farfuture/jMiNEDnAgTzSrwJikC8uyg6WEvxpECU3V2ZTqsskiFo/1623314163/sites/default/files/inline-images/th_1056.jpg)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.
மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம். கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்ய காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையைப் பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
டி.எம். கிருஷ்ணாவின் இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவுக்கு 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.