
“எனது மனைவி கோபப்பட்டு என்னிடம் பேசுவதே இல்லை” எனக் கூறி காவலர் ஒருவர் விடுப்பு விண்ணப்பம் எழுதிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
உ.பி. மாநிலம் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வா காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. போலீஸ் வேலை என்பதால் பெரும்பாலும் விடுமுறை இல்லாமல் தனது பணியைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், அந்த காவலர், தனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமான தன் மனைவி தன்னிடம் பேசுவதே இல்லை என மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளருக்கு விடுப்பு விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது உறவினர் ஒருவரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவதாக என்னுடைய மனைவிக்கு வாக்கு கொடுத்திருந்தேன். ஆனால், எனக்கு விடுப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே பலமுறை இவ்வாறு வாக்கு கொடுத்துவிட்டு என்னால் செல்ல முடியாததால் எனது மனைவி கோபப்பட்டு என்னிடம் பேசுவதே இல்லை. தற்போது விடுப்பு கிடைக்கவில்லை என்றால், என்னால் வீட்டிற்குச் செல்ல முடியாது.” என்று புலம்பியபடி விடுப்பு விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் காவலருக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.