தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை புயல் உருவாகும் பட்சத்தில் அந்த புயலுக்கு மிதிலி (Midhili) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு கொடுத்த பரிந்துரையின் பேரில் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிஸா மாநிலத்திற்குச் செல்லும் பொழுது மழைக்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக வங்கதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5.30 நிலவரப்படி 18 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறைவு. தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டத்தை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.