இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், “இளநிலை நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தேர்வை எழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு தீவிரமான விளைவுகளை கொண்ட ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
எந்தவொரு தேர்விலும் வினாத்தாள்களின் ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சில குற்றவியல் கூறுகளின் பேரில் சில குற்றச்செயல்கள் காரணமாக, ரகசியத்தன்மை மீறப்பட்டால் இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அந்த நபர் மீது சட்டத்தின் முன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்தல், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.