மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பயணிகளை கவரும் வண்ணம் தனது ஆட்டோவில் கைகழுவும் குழாய், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல சொகுசு வசதிகளை செய்து வைத்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சத்யவான் கிதே என்னும் அந்த ஆட்டோ டிரைவர், “தற்போதைய காலத்தில் மக்கள் எதாவது புதிதாக ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதனால் நான் எனது ஆட்டோவை பயணிகள் ஒரு வீடுபோல நினைக்க வேண்டும் என்பதற்காக பூந்தொட்டி, கைகழுவும் குழாய், ஆர் ஓ குடிநீர் வசதி, கணினி என்று பல சொகுசு வசதிகளை அமைத்துள்ளேன்.” என்றார்.
மேலும், “அந்த ஆட்டோவில் மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ளலாம், முதியோருக்கு ஒரு கிமீ பயணம் என்றால் இலவசம், பயணிகளுக்கு சிறப்பான சேவையை புரியவே நான் இதுபோன்ற சிறப்பு வசதிகளை செய்துள்ளேன்” என்று ஆட்டோ டிரைவர் தெரிவிக்கிறார்.
இந்த ஆட்டோவின் புகைப்படமானது மும்பைவாசிகளின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இதேபோன்று ஆட்டோவில் பல சிறப்பு வசதிகளை கொண்ட ஆட்டோவை சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் அறிமுகப்படுத்தி பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.