ராமர் கோயிலுக்கு பூமி பூஜை செய்யும் இந்த நாள் வந்ததைப் பலராலும் நம்ப முடியவில்லை எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், "ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். ஒரு கட்டத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். இப்படி ஒரு நன்னாள் வந்ததைப் பலராலும் நம்ப முடியவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து அனைத்துத் தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம். நமது நீதித்துறையின் மாண்புக்குச் சான்றாக ராமர் கோயில் விளங்கும். மேலும், இந்தப் பிரமாண்டமான ராமர் கோயில் இந்தியக் கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன். இது முழு மனிதக்குலத்தையும் உலகம் உள்ள வரை காக்கும் என நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.