ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, 'புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. நமது பாதுகாப்பு படையினரின் வீரத்தை நம் நாடு பல பார்த்துள்ளது. அவர்களின் துணிச்சல் மற்றும் வீரத்தை சந்தேகப்படும் ஒருவர்கூட இந்த நாட்டில் இருக்க மாட்டார்கள். புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிட கூடாது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் கையில் திருவோடுடன் நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு எந்த நாடும் கண்டிப்பாக உதவி செய்யாது' எனக் கூறினார்.