இந்தியாவில் உருவாக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை செயலி மொபிக்விக் (mobikwik). இந்தச் செயலி, டிஜிட்டல் வாலட் (digital wallet) முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்தநிலையில், மொபிக்விக் வாடிக்கையாளர்களின் விவரங்கள், டார்க் வெப்பில் விற்பனை செய்யப்படுவதாக சுதந்திரமான இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
முதலில் ராஜ்ஷேகர் ராஜஹாரியா என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், சுமார் 11 கோடி இந்தியர்களின் தொலைப்பேசி எண், ஆதார் அட்டை தரவுகள், கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள் கசிந்து விட்டதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து மேலும் சில இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், 35 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அடங்கிய டேட்டா-பேஸ் டார்க்-வெப்பில் வெளியாகி இருப்பதாகக் கூறினர். மேலும், உலகின் மிகப்பெரிய வாடிக்கையாளர் விவரங்கள் கசிந்த நிகழ்வாக இது இருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.
இந்தவிவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் மொபிக்விக் நிறுவனம், வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியவில்லை என விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், "நாங்கள் இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். எந்தப் பாதுகாப்பு குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயனர்கள் மற்றும் எங்கள் நிறுவனத்தின் தகவல்கள் பாதுகாப்பானது மற்றும் பத்திரமானது" எனத் தெரிவித்துள்ளது.