டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (12/06/2021) காலை காணொளி மூலம் 44- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், மத்திய நிதித்துறைச் செயலாளர், ஜிஎஸ்டி அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கருப்பு பூஞ்சைச் சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான 'Tocilzumab' மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல்ஸ் ஆக்சிமீட்டர் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர், வெண்டிலேட்டர் மாஸ்க் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%- ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.