இந்திய விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரா போஸின் 125 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது, நேதாஜியின் பிறந்த நாள், இனி "பராக்கிராம் திவாஸாக" (பராக்கிரம ஜெயந்தி) கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் நடைபெறும் முதல் பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நேதாஜியை கௌரவப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.
இந்தநிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, பேச வந்தபோது, 'ஜெய் ஸ்ரீ ராம்' எனக் கோஷம் எழுந்தது. இதனால் அதிருப்தியடைந்த மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர், "அரசாங்க நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது ஒரு அரசியல் நிகழ்ச்சியல்ல. ஒருவரை அழைத்த பிறகு அவர்களை அவமதிப்பது ஏற்புடையதல்ல. ஒரு போராட்டமாக, நான் எதுவும் பேசமாட்டேன்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் பங்கேற்ற விழாவில், முதல்வர் பேச மறுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.