மேற்குவங்கம் மாநிலம், சாந்தி நிகேதன் பகுதியில் மத்திய அரசின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதே பகுதியில் நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வசித்து வருகிறார். 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அமர்த்தியா சென்னின் வீடு இருந்து வருகிறது. இந்த வீடு விஸ்வ பாரதி பல்கலை கழகத்தால் அமர்த்தியா சென்னின் தந்தைக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது.
தற்போது அதனை ஒட்டியுள்ள 5,662 சதுர அடி பல்கலைக்கழத்திற்குச் சொந்தமான நிலத்தை அமர்த்தியா சென் ஆக்கிரமித்ததாகவும் அதனால், அவர் தனது வீட்டை 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் விஸ்வ பாரதி பல்கலை. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த அமர்த்தியா சென், 5,662 சதுர அடி நிலம் எனது தந்தையால் வாங்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ‘அமர்த்தியா சென் இல்லம் முன்பு மேற்குவங்க மாநில அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட வேண்டும். பல்கலை. அதிகாரிகள் புல்டோசர்கள் கொண்டு வந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகராதீர்கள்’ என தனது அமைச்சர்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.