பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5வது பொதுக் கூட்டம் ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாக கூட்டணி 2-வது முறையாக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது.
இந்த கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனை, பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் பங்கேற்க அழைப்பு விடப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதுபோல இதுகுறித்து பேசியுள்ள மம்தா, "நிதி ஆயோக் கூட்டத்தில் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேச அனுமதிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்துள்ளார்.