டெல்லியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ரத்தப் புற்றுநோய் அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் இனிமேல் சிறுவனைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் கவலையில் பெற்றோர்கள் இருந்துள்ளனர். சிறுவனின் பெற்றோருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுவனை, புனித நதியாக நம்பப்படும் கங்கை நதியில் நீராட வைத்தால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று அவரது பெற்றோர்கள் நினைத்தனர். அதன் காரணமாகச் சிறுவனை டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு அழைத்து வந்து அங்குள்ள கங்கை நதியில் நீராட வைத்துள்ளனர். பொதுவாக வட மாநிலங்களில் இது கடும் குளிர்காலம் என்பதால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே புற்றுநோயால் உடல்நிலை மோசமாக உள்ள சிறுவனை அழைத்து வந்து கங்கை நதியில் நீராட வைத்துள்ளனர். சிறுவனின் தலையை நீரில் மூழ்க வைத்துவிட்டு அவரது பெற்றோர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் தலையை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அருகில் இருந்தவர்களே சிறுவனை தண்ணீரிலிருந்து எடுத்து கரைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோர்களின் அதீத மூடநம்பிக்கையால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.