காலாவதியான வாகன உரிமங்கள் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக அரசுத்துறை, தனியார்த்துறை என அனைத்து துறைகளிலும் பணிகள் முடங்கின. இந்நிலையில், இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் புதுப்பிக்கப்பட்ட வேண்டிய ஓட்டுநர் உரிமங்கள் செல்லுபடி காலத்தை தொடர்ந்து நீட்டித்து வருகிறது மத்திய அரசு. காலாவதியான வாகன உரிமங்களைப் புதுப்பிப்பதற்கு முதலில் ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, ஆவணங்களின் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்திருந்தாலும் அது செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது.