ரயில் நிலையங்களில் இனிமேல் எல்.இ.டி. பல்புகள் மட்டுமே! - ரயில்வே அமைச்சகம்
ரயில் நிலையங்களில் இனி எல்.இ.டி. பல்புகளை மட்டுமே பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்படவுள்ளன. இதன்மூலம், மின் பயன்பாடு கணிசமாக குறைக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்கு எல்.இ.டி பல்புகளால் பாதிப்புகள் ஏற்படாது. 2018 ஏப்ரல் 1ஆம் தேதி அனைத்து ரயில் நிலையங்களிலும் 100% எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ரயில்வே காலனிகள் மற்றும் கேண்டின்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரயில்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மொத்த மின்சாரத்தில் 240 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். மேலும், அரசுக்கு ரூ.180 கோடி சேமிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.