கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது சம்பவ இடத்திற்கு டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் 'பட்டாசு ஆலையில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி இருப்பது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது' என இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.