வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பில் உறுப்பினராக இருந்த சின்மய் கிருஷ்ணா தாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளராக அவர் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் நடந்த இந்து மத ஊர்வலத்தின் போது, வங்கதேசத்தின் தேசியக் கொடி அவமதித்தாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சின்மய் கிருஷ்ண தாஸ் உள்பட 19பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வங்கதேசம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர். அதே வேளையில், சட்டோகிராமில் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோயில், மான்சோ மாதா கோயில், மற்றும் ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோயில் ஆகிய இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கதேசத்தில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படது என வடக்கு கொல்கத்தாவின் மானிக்தலா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து ஜே.என்.ரே மருத்துவமனையின் அதிகாரி சுப்ரான்ஷூ பக்த் கூறியதாவது, “இன்று முதல் காலவரையின்றி எந்த ஒரு வங்கதேச நோயாளியையும் நாங்கள் சிகிச்சைக்காக அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இந்தியாவை அவர்கள் அவமதித்ததன் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
மூவர்ணக்கொடி அவமதிக்கப்படுவதைப் பார்த்து, வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர்களின் சுதந்திரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை நாங்கள் காண்கிறோம். மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவளித்து, இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.