கேரள அரசு கடன் வாங்குவதில் உச்சவரம்பு விதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தப் போராட்டத்தின் போது முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதற்கு எங்கள் வலுவான எதிர்ப்பைப் பதிவுசெய்து, இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இந்தப் போராட்டத்தின் மூலம் மாநிலங்களை சமமாக நடத்துவதை உறுதிசெய்ய இன்று மீண்டும் ஒன்றிணைந்த போராட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்தப் போராட்டம் சமநிலையை நிலைநாட்ட பாடுபடும். மத்திய மற்றும் மாநில உறவில் பிப்ரவரி 8 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு சிவப்புக் கடித தினமாக இருக்கப் போகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி டெல்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (07.02.2024) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
அதே போன்று வெள்ள நிவாரண நிதி வழங்காதது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரியும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரியும் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி. ஆர். பாலு எம்.பி. தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று (08.02.2024) சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.