62 நாட்களாக சிறையில் அடைத்து வைத்திருக்கும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்ற பத்திரத்தில் கையெழுத்துப் போடும்படி காஷ்மீர் அரசு மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 5- ஆம் தேதி முதல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தையும், மாநில அந்தஸ்த்தையும் பறித்த மத்திய அரசு, அரசியல் தலைவர்களையும், சமூக நல அமைப்புகளின் தலைவர்களையும் கைது செய்து ஸ்ரீநகரில் உள்ள அரசுக்கு சொந்தமான செண்டார் ஹோட்டலை சிறைக்கூடமாக்கி, அதில் அடைத்து வைத்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்படி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் வயது முதிர்ந்தவர்கள் அரசின் மிரட்டலுக்கு பயந்து வெளியே எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலை ஆனார்கள். பலர் அப்படி எழுதிக் கொடுக்க மறுத்து சிறையிலேயே இருந்தனர். சமீப நாட்களாக மேலும் பல அமைப்புகளின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை ஆகி வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் நிலை தெரியவில்லை. ஆனால், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாடியுடன் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியிடம் பத்திரத்தில் கையெழுத்து கேட்டதாகவும், இப்படி கையெழுத்து வாங்க எந்த சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது என்று கேட்ட அவர், கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் அவருடைய மகள் கூறியிருக்கிறார். “அரசியல் நடவடிக்கைகள் மூலம் அமைதியை சீர்குலைக்க மாட்டேன்” என்ற வாசகத்துடன் பத்திரத்தில் கையெழுத்துப்போட்டால் மட்டுமே விடுதலை என்று மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் காஷ்மீர் அரசு செயல்படுவதாக கூறப்படுகிறது.