கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரின் கடிதத்தை பரிசீலனை செய்து வரும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் சிறுதொழில் துறை அமைச்சராக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ. சங்கரை தகுதி நீக்கம் செய்ததாக அதிரடியாக அறிவித்தார் சபாநாயகர்.
இது குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள செய்தியில் ராஜினாமா கடிதம் அளித்த சுயேட்சை எம்.எல்.ஏக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இதன் காரணமாகவே தகுதி நீக்கம் செய்ததாக கூறினார். கர்நாடக மாநிலம் பெனனுர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.சங்கர்,காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் கும்தஹள்ளி, மகேஷ் உள்ளிட்ட இரு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் கொறடா கொடுத்த பரிந்துரையின் படி தகுதி நீக்கம் செய்துள்ளதாக கூறினார். இன்னும் 13 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் சபாநாயகரிடம், நிலுவையில் இருப்பதால், இந்த தகுதி நீக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகரின் நடவடிக்கையால், கர்நாடக மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தகுதி நீக்கம் நடவடிக்கையை கண்டு பாஜக அதிர்ந்து போய் உள்ளது.