Skip to main content

காவிரி நதி நீர் விவகாரம்; மறு ஆய்வு செய்ய கர்நாடக அரசு கோரிக்கை

Published on 04/09/2023 | Edited on 04/09/2023


 

Karnataka government request for re-examination about Cauvery water issue

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்திருந்த பரிந்துரையைக் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

 

இதனையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த மனுவில், ’மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விட கோரி’ மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இது தொடர்பான மனு நாளை மறுநாள் (06-09-23) உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. 

 

இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கர்நாடகா மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டுக்கு வரும் 12 ஆம் தேதி வரையில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை ஆணையம் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்