நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அப்போது, பேசிய பாஜக எம்.பி அனுராக் தாகூர், “சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றிப் பேசுகிறார்கள்..” என்று கூறினார். இது ராகுல் காந்தியை தான் மறைமுகமாக அனுராக் தாகூர் விமர்சனம் செய்தார் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அனுராக் தாகூர் பேசியது நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி. அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதற்கும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி கரூர் எம்.பி. ஜோதிமணி, “நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது. ஆனால் உங்களுக்குச் சாதி, மதம் தான் முக்கியமாக இருக்கிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரை- எனது தலைவர் ராகுல்காந்தியை பார்த்து உனது சாதி என்ன? என்று கேட்கிறீர்கள். அது நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர், நரேந்திர மோடி நீக்கப்பட்ட பகுதியையும் சேர்த்து அந்தக் கேவலமான பேச்சைப் பெருமையோடு பொதுவெளியில் பகிர்கிறார்.
உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? சாதிதான் ஒருவருடைய அடையாளமா? உங்களுக்கு வேண்டுமானால் சாதி அடையாளமாக இருக்கலாம். எங்களுக்கு சமூக நீதிதான் அடையாளம். உங்களுக்கு வெறுப்பு அடையாளம். எங்களுக்கு அன்பு அடையாளம். உங்களுக்குப் பிரிவினை அடையாளம். எங்களுக்கு ஒற்றுமை அடையாளம். உங்களுக்கு மனுநீதி அடையாளம். எங்களுக்கு மக்களாட்சி அடையாளம். அதை நிலைநிறுத்துகிற அரசியல் சாசனம் அடையாளம்.” என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.