ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர், ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் ஜார்க்கண்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அந்த புகார்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மிதிலேஷ் குமார் தாக்கூரில் தனிச் செயலாளர் ஹரேந்திர சிங், அமைச்சரின் சகோதரர், ஒப்பந்தக்காரர்கள், அரசியல் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் மொர்ஹபாடியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சன் உள்ளிடோருக்கான சொந்தமான இடங்களில் நேற்று (14-10-24) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஹேமந்த் சோரன் அமைச்சரவையில், முக்கிய அமைச்சராக இருக்கும் மிதிலேஷ் குமார், கர்வா சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்ற நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணை வளையில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் சிக்கியுள்ளார்.
அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அமைச்சர் மிதிலேஷ் குமார் தாக்கூர் கூறுகையில், “இது அமலாக்கத்துறை சோதனை அல்ல, அரசியல் சோதனை. அமலாக்கத்துறை முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டால் அதற்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் கொடுப்போம். அமலாக்கத்துறை ஒரு பொம்மையாக மாறக்கூடாது. மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் எவ்வளவு பணம், பொருள் கைப்பற்றப்பட்டது என்பதை அமலாக்கத்துறை வெளியிட வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே, பா.ஜ.கவில் சேரும்படி எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், என்னை சிறையில் தள்ளினாலும், தூக்கிலிட்டாலும் பரவாயில்லை ஒருபோதும் பா.ஜ.க.வில் சேர மாட்டேன். ஜார்க்கண்டில் அவர்கள் தோற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். நாங்கள் எப்போதும் அவர்களுக்கு தலைவணங்க மாட்டோம். ஜார்கண்ட் மக்களுக்கு எந்த விதமான வஞ்சகமோ, மோசடியோ நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார்.