'ஜெட் ஏர்வேஸ்' (JET AIRWAYS) நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்தியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். அதே போல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ஆறு மாத ஊதியத்தை வழங்காததால் அந்நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களை மத்திய விமான போக்குவரத்து துறை செயலர் அழைத்து பேசினார். மற்ற விமான நிறுவனங்களில் இந்த ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தாலும் ஏற்கனவே பெற்ற ஊதியத்தில் இருந்து சுமார் 30 சதவீதம் குறைவான ஊதியமே பெறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஏலத்தில் விடும் முயற்சியில் இறங்கியுள்ள எஸ்பிஐ வங்கி ஒரு வாரத்தில் தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏனெனில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள இந்துஜா குழுமம் (HINDUJA GROUP) 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து ஒரு வாரத்தில் இறுதி முடிவை இந்துஜா குழுமம் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த ஏர்வேஸ் ஊழியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல் துறையில் அசைக்க முடியாத நிறுவனமாக உள்ள நிலையில் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இந்துஜா குழுமம் மென்பொருள் துறை, உதிரிப்பாகங்கள் துறை, பிரிவுகளில் நிறுவனத்தைத் தொடங்கி அதை சிறப்பாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அதன் பிறகு அமையவிருக்கும் புதிய அரசு ஏர்வேஸ் ஊழியர்கள் நலன் காக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.