சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் மேக வெடிப்பால் பெய்து தீர்த்த மழையால், அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் முகாமில் இருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களும் தீஸ்தா ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
இதனிடையே, தீஸ்தா ஆறு, அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பாயும் நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கிலும், ராணுவ வீரர்களின் ராணுவ உபகரணங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு கரையில் ஒதுங்கியுள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆற்றின் கரையில் ஒதுங்கியுள்ள பீரங்கி குண்டை எடுத்துள்ளார். அந்த பீரங்கி குண்டை இரும்பு பொருள் என நினைத்து அதை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இரும்பு பொருள் என நினைத்து பீரங்கி குண்டை உடைத்து பழைய இரும்பு கடையில் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று எண்ணியுள்ளார். அதன்படி, அந்த பீரங்கி குண்டை தனது வீட்டில் வைத்து உடைத்துள்ளார். அப்போது, பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அவரது வீட்டில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, தீஸ்தா ஆற்றின் கரையின் ஒதுங்கி இருக்கும் எந்த பொருளையும் தொட வேண்டாம் என பொதுமக்களை ஜல்பைகுரி மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீஸ்தா ஆற்றில் ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே, அவற்றை தொடாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். அறிமுகமில்லாத பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.