ராகுல்காந்தி தொடர்பாக, பா.ஜ.க. வெளியிட்ட ஒரு வீடியோ அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, நேபாளத்தில் விடுதியில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறி வீடியோ ஒன்றை பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அமித் மாளவியா சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி எங்கே இருக்கிறார்? எந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் என பா.ஜ.க. வினர் சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சனங்களைக் குவித்தனர். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மத, கலவரச்சூழல் உள்ள நிலையில், ராகுல்காந்தி பார்ட்டிக் கொண்டாட்டத்தில் இருப்பதாகவும், சில விமர்சனங்கள் வந்தனர்.
மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து கூட விமர்சனங்கள் எழுந்தன. பா.ஜ.க.வின் இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடிக் கொடுத்துள்ளது. நேபாளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் திருமணத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற போது, எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி நண்பரின் திருமணத்தில் பங்கேற்பது ஒரு குற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
பா.ஜ.க.வின் செயல்பாடுகளைப் பார்த்தால், நண்பர்களைக் கொண்டிருப்பதும், அவர்களது திருமணங்களில் கலந்து கொள்வதும் சட்ட விரோதம் என நாளையே அறிவித்துவிடுவார்கள் போல உள்ளது என்றும் காங்கிரஸ் கட்டமாக விமர்சித்துள்ளது. ராகுல்காந்தியின் தனிப்பட்ட நிகழ்ச்சியைக் கூட தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா சாடியுள்ளார்.
இதற்கிடையே, தனது மகளின் திருமணத்திற்காக ராகுல்காந்தியை அழைத்ததாக மியான்மருக்கான நேபாள நாட்டு தூதர் விளக்கம் அளித்துள்ளார்.