மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் சில முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. சம்பா சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வேயில் 5ஜி இணையச் சேவையைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மேக்-இன் -இந்தியாவின் கீழ் 4 இந்திய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ரயில் விபத்தை தவிர்க்கும் தொழில்நுட்பத்தையும், நிகழ்நேர தகவல் தொடர்பு அடிப்படையிலான மோதல் தவிர்ப்பு முறையையும் இந்திய ரயில்களில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும்.
அதேபோல, ரயில்வே துறைக்கு 700 மெகா ஹெர்ட்ஸ் அளவுகொண்ட அலைவரிசையில், 5 மெகா ஹெர்ட்ஸ் 4ஜி அலைக்கற்றை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் LTE அடிப்படையிலான விரைவான தகவல் தொடர்பு முறை ரயில்வே துறையில் கொண்டுவரப்படும். ரயில்வே தற்போது ஆப்டிகல் ஃபைபர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், ரயில்வே துறையில், அடுத்த 5 ஆண்டுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரூ .25,000 கோடி செலவிட முடிவுசெய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.