இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 1 வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு அறுவை சிகிச்சை மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் என 6.5 டன் மருந்து பொருட்களும், மக்கள் தங்க கூடிய கூடாரங்கள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் என 32 டன் அத்தியாவசிய நிவாரண பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிவாரண பொருட்கள் உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமான தளத்தில் இருந்து ஐஏஎப் சி 17 விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிவாரண பொருட்களை சுமந்து செல்லும் இந்த விமானம் எகிப்தில் உள்ள எல் அரிஸ் விமான நிலையத்திற்கு சென்றடையும். அங்கிருந்து பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.