இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி வரும் 25ம் தேதி நடைபெற இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. போட்டி நடக்கும் நாளில் இருந்து 3 தினங்களுக்கு முன்னதாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மக்கள் டிக்கெட்களை வாங்க கூடினர்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் நடக்கும் சர்வதேச போட்டி என்பதால் டிக்கெட்களை வாங்க அதிக அளவில் மக்கள் கூடி இருந்தனர். சில மணி நேரங்களில் கூடி இருந்த மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீசார் தடியடி நடத்தியதில் மக்கள் சிதறி ஓடினர்.
இந்த தள்ளு முள்ளில் சிக்கி 5 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். மேலும் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் மீண்டும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.