![incident in puducherry prison](http://image.nakkheeran.in/cdn/farfuture/OJof07I5ZJMLMCznVAFD6Vrafdt2_Hzvq-yVKM0wQXg/1593109540/sites/default/files/inline-images/dzgdgdgd.jpg)
புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் 3 பேருக்கு இன்று கரோனா தோற்று உறுதியானது. இவர்கள் நெட்டப்பாக்கம் காவல் நிலைய வழக்கில் சிறையில் உள்ள ஒரு கைதி, கோரிமேடு காவல் நிலைய வழக்கில் சிறையில் உள்ள 2 கைதிகள் ஆவர். ஏற்கனவே காலாப்பட்டு சிறையில் விசாரணைக் கைதி அறையிலிருந்த இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது 3 பேர் என மொத்தம் காலாப்பட்டு சிறையில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்தியச் சிறைச்சாலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றது என்றும், இதனை நிர்வாகம் சரிவர கையாளவில்லை என்றும் கூறி விசாரணை கைதிகள் இரண்டு பேர் ஜெயில் சுவர் மீது ஏறி, போராட்டம் நடத்தினர். மேலும் சிறைத்துறை அதிகாரிகளைக் கண்டித்து 3 பேர் சீகக்காய் தூளைக் கரைத்துக் குடித்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சிறைச்சாலை சுவர் மீது இருவர் ஏறி நின்று போராட்டம் நடத்தியதும், இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதும் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.