பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய அறிவிப்புகள் விரைவில்...! - அருண் ஜேட்லி
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் படுமோசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 6.1ஐத் தொட்டது. ஏப்ரல் - ஜூன் காலாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7%-ஆக ஆனது. இதனால், வளரும் நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிநிலையைக் கட்டுப்படுத்தி, மேம்படுத்துவது குறித்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘கிடைக்கும் அனைத்து பொருளாதாரக்குறிப்புகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். அரசு தேவைப்பட்டால் எந்த கூடுதல் நடவடிக்கையையும் இதற்காக மேற்கொள்ளும். எந்த அறிவிப்பையும் வெளியிடும் இடத்தில் நானில்லை. இதுகுறித்து பிரதமரிடத்தில் ஆலோசனை நடத்தியபின்னர் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், இதுகுறித்து அமைச்சரக முக்கிய ஆலோசகர்கள் மற்றும் அரசு தரப்பு பொருளாதார ஆலோசகர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்