தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சாவர்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கலந்துகொள்வதாக 25 கட்சிகள் அறிவித்த நிலையில் நிகழ்வை புறக்கணிப்பதாக 20 கட்சிகள் அறிவித்தது. இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிலையில் "நாடாளுமன்றத் திறப்பு விழாவில், காலையில் நடந்தவற்றை பார்த்தேன்; நான் அங்கு செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். யாகத் தீ வளர்த்து, புரோகிதர்களை கொண்டு கிரகப் பிரவேசம் போல புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துள்ளனர்; இவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் செயல்" என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல்; புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது தனக்கான முடிசூட்டு விழாவாக கருதுகிறார்" எனக் கூறியுள்ளார்.