தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலும், அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நேற்று (09-11-23) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பப்பட்டு, சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மோடி அந்த புள்ளியை சிவசக்தி எனப் பெயரிட்டார். ஆனால், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு சூதாட்ட செயலியை துவங்கியுள்ளது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விசாரணை கமிஷன் அமைத்து ஊழல் செய்த அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் அதிக அளவில் மதமாற்றம் நடந்துள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர்களின் விருப்பத்திற்கு மாறாக மதம் மாற்ற விடமாட்டோம்” என்று கூறினார்.