இமாச்சலப்பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடத்தி வரும் நிலையில், அதன் ஆட்சிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 55,74,793 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர்.
இந்த மாநிலத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். மேலும் 38 மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக இமாச்சலத்தில் காங்கிரஸ், பாஜகவிற்கு இடையேதான் போட்டி நிலவும். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆம் ஆத்மியின் வருகையில் இமாச்சலத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. மூன்று கட்சிகளும் 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்கிறது.
இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் துணை ராணுவப் படையினர், மாநிலக் காவல்துறையினர் என 30000 பேருக்கும் மேல் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து சிறப்பு கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் குஜராத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.