கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திராத நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 20 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் கணிசமான தொகுதிகளை வென்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி மீது ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் கவனமும் திசை திரும்பியிருக்கிறது. இந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களே ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
![jok](http://image.nakkheeran.in/cdn/farfuture/wxWyxPaCNfSk5_aRj2C7zzNvkOWIeRlwtCIQf97B8Ws/1571914341/sites/default/files/inline-images/catsjkl.jpg)
ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் துஷ்யந்த் சவுதாலா. கடந்த ஆண்டின் இறுதியில் தான் இந்த கட்சியை அவர் தொடங்கினார். துஷ்யந்த சவுதாலா முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப் பேரனாவார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவரான அவர், தற்போது ஹரியானாவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.