இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

சுமார் 80 நாடுகளில் கரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பயம் இல்லாமலும், அதேநேரம் கவனத்துடனும் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கரோனாவின் தாக்கம் மற்றும் அதற்காகச் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "ஜனவரி 17 ஆம் தேதி முதலே கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் இந்தியா தொடங்கிவிட்டது. மார்ச் 4 ஆம் தேதி வரை, இந்தியாவில் கரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28529 பேர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.