சபர்மதி நதியில் மிதந்த ஜஸ்பிரித் பும்ராவின் தாத்தா உடல்!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் தாத்தா உடல் சபர்மதி நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் (வயது 84). இவர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தனது பேரன் ஜஸ்பிரித் பும்ராவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரைப் பார்ப்பதற்கு அவரது வீட்டில் அனுமதி கொடுக்கப்படவில்லை. டிசம்பர் 5ஆம் தேதி ஜஸ்பிரித் பும்ராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரோடு பேசவும் வாழ்த்து தெரிவிக்கவும் நினைத்த சந்தோக் சிங்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவிடம் தொலைபேசியில் பேசுவதற்கும் அவரது தாயார் சந்தோக் சிங்கை அனுமதிக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி சந்தோக் சிங் அவரது மகன் பல்விந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து, இறந்துபோன உன் தாயைச் சந்திக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன்பிறகு காணாமல் போன அவரைத் தேடிவந்த நிலையில், இன்று காலை சபர்மதி நதியில் சடலமாக மீட்டுள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.
ஜஸ்பிரித் பும்ரா இலங்கையுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.